- உடன்குடி செய்யது அபூபக்கர் சித்திக்
உலகில் உள்ள அனைவரும் சுவர்க்கம் செல்லவேண்டும் என்று ஆவல் கொண்டு உள்ளோம். ஆனால் நம்மை அதற்கு தயார்படுத்திக்கொண்டு உள்ளோமா என்று சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம். உலகில் உள்ள பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக இருப்பது பேச்சு. ஒருவர் தன்னுடைய பேச்சால் வெல்லவும் முடியும்.. அதே நேரத்தில் கொல்லவும் முடியும். அது அந்த பேச்சின் தன்மையை பொருத்தது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், நண்பர்களுக்குள் பிரச்சனைகள் மற்றும் அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் முக்கியகாரணம் நாக்கு. நன்றாக பேசிகொண்டிருக்கும் நண்பர்களுக்கு இடையில் திடீர் விரிசல் ஏற்படும். காரணம் என்ன என்று பார்த்தோமேயானால், பேச்சினால் ஏற்ப்பட்ட விபரீதமே.
ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம் 'பெருமளவு மனிதர்களை சொர்க்கத்தில் சேர்ப்பவை யாவை?' என்று கேட்கப்பட்ட போது 'இறையச்சமும் அழகிய குணங்களும்' என்றார்கள். மனிதர்களை பெருமளவு நரகத்தில் சேர்ப்பவை யாவை? என கேட்கப்பட்டதற்கு 'வாயும் மர்ம உறுப்பும்' என விடையளித்தார்கள் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிகின்றார்கள்(திர்மிதி).
மேற்கண்ட ஹதீஸிலிருந்து ஒருவரை நரகத்திற்கு இட்டுசெல்லும் காரணிகளில் ஒன்றாக நாக்கு இருப்பது புலப்படும். ஆகவே நாம் நம்முடைய நாவை பேணினால் எளிதாக சொர்க்கம் செல்லமுடியும். நாவை எவ்வாறு பேணுவது? என்று சிலர் கேட்கலாம். அதற்கும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
உண்மையை பேசவேண்டும்
இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.(3:17)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.(33:70)
நீதமாக பேசவேண்டும்
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.(6:152)
மிக அழகியதை பேசவேண்டும்
(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.(17:53)
அன்பாக பேசவேண்டும்
(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக! (17:28)
நளினமாக பேசவேண்டும்
“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.”(20:44)
மரியாதையாக பேசவேண்டும்
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!(17:23)
நல்லதையே பேசவேண்டும்
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் பேசினால் நல்லதை பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்துவிடுங்கள். (புஹாரி, முஸ்லிம் )
வீண்பேச்சை தவிர்த்துக்கொள்ள வேண்டும்
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.(23:3)
பொய் பேசாதிருக்க வேண்டும்
இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். (22:30)
புறம் பேசாதிருக்க வேண்டும்
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (49:12)
ஆதாரமற்றதை பேசாதிருக்க வேண்டும்
“யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (2:111)
அவதூறு பேசாதிருக்க வேண்டும்
ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (33:58)
ஆகவே சகோதர சகோதரிகளே! இஸ்லாம் கற்றுத்தரும் படிப்பினைகளை ஏற்று அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியிலே நடந்து, இம்மையிலும் மறுமையிலும் வெற்றிகண்டு இன்ஷா அல்லாஹ் சுவனத்தில் நுழைய அனைவரும் முயற்சி செய்வோமாக..

No comments:
Post a Comment