- உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
யார் அந்த பத்து பேர்? அவர்களிடம் என்ன சிறப்பு இருக்கிறது? ஆம்.. அவர்களிடம் மிக உயரிய சிறப்பு இருக்கிறது.. அது தான் அஷ்ரதுல் முபஷரா என்ற சிறப்பு.. நபி பெருமானார் (ஸல்) அவர்களால் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட நபிதோழர்கள் அவர்கள்.
ஒரு முஸ்லிம் இறைவனிடத்திலிருந்து விரும்பக்கூடிய மிக பெரிய வெகுமதி என்னவென்றால், தன்னை படைத்தவனை சந்திக்கின்ற அந்த நாளில் வெற்றி பெற்ற கூட்டத்தினருடன் சொர்க்க சோலையிலே உலாவருவது தான். அத்தகைய சொர்க்க சோலையிலே உலா வரக்கூடிய கூட்டத்தில் ஒருவராக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவாயினால் அருள்வாக்கு பெற்றவர்கள். அதாவது இந்த உலகத்திலேயே சொர்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபி(ஸல்) அவர்களுடைய தோழர்கள்.
எவ்வாறு அவர்களுக்கு இந்த பெரும்பேறு கிடைத்தது? அவர்கள் செய்தது என்ன? இதுபோன்ற கேள்விகள் நம்முன்னே எழலாம். நபித்தோழர்களின் ஈமானிய உறுதி.. இறைமார்க்கதிற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம்.. இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அவர்கள் கொண்டிருந்த அன்பு.. இவைகள் தாம்.. அவர்களுக்கு இந்த சிறப்பை பெற்று தந்தது. சொந்தபந்த உறவுகளோ? அல்லது இறைவனின் மார்க்கமா? சொந்த விருப்பு வெறுப்பா? அல்லது இறைவனின் கட்டளையா?? இவ்வுலக வாழ்க்கையா? அல்லது மறுமை வெற்றியா?? என்ற இக்கட்டான நிலைகள் தன்முன்வந்து நின்றபோது இறைமார்க்கத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இறைவனின் கட்டளைகளை தான் செவிமடுத்தார்கள். மறுமை வெற்றியை தான் நாடினார்கள். இதன் மூலம் அவர்கள் தான் ஏற்றுகொண்ட மார்க்கத்தில் உறுதியை வெளிப்படுத்தினார்கள். இறைவனின் மீதுள்ள அன்பானது மற்ற எல்லாவற்றையும் மிஞ்சியது. இறைவனது அன்பைப் பெறுவது ஒன்றே தங்களது நோக்கமாக கருதி வாழ்ந்து வந்தவர்கள். அதற்காக உழைத்தவர்கள். இஸ்லாத்தை அவர்கள் வெறும் வாயினால் உரைக்கவில்லை. தங்களுடைய வாழ்கையில் இஸ்லாத்தை பிரதிபலித்து காட்டினார்கள்.
அந்த பத்து நபித்தோழர்கள் :
1. அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா ரலி)
2. உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
3. உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)
4. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
5. தல்ஹது இப்னு உபைதுல்லாஹ்
6. ஸுபைர் இப்னு அவாம் (ரலி)
7. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
8. ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி)
9. ஸயீது இப்னு ஸைது (ரலி)
10. அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி)
அன்பான சகோதர சகோதரிகளே! இவர்கள் யாவரும் நம்முடைய முன்மாதிரிகள். முன்சென்ற சமூகத்தின் முன்னேற்றகரமான தூண்கள் அவர்கள் வீண் விளையாட்டுக்களிலும் கேளிக்கைகளிலும் மூழ்கிஇருந்தவர்கள் அல்ல. இவர்களை முன்மாதிரியாக கொள்ளும் ஒவ்வொருவரும் அவர்களை போன்று உயர்ந்த இடத்தை அல்லாஹ்வின் உதவியுடன் இன்றும் என்றும் அடையலாம். மேலும் அல்லாஹ்வின் நிழலை அன்றி வேறு எந்த ஒரு நிழலும் இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் நிழல் கொடுக்கின்ற ஏழு பிரிவினரில் ஒருவராக நாமும் ஆகலாம்.
மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். (58:22)
அல்லாஹ் விரும்புகின்ற அவன் பொருந்தி கொண்ட விஷயங்களை அவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக! வெற்றிபெற்ற கூட்டத்தில் நம் அனைவரையும் ஆக்கிவைப்பானாக! அகில உலக இரட்சகன் அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்..
அல்ஹம்துலில்லாஹ்..

No comments:
Post a Comment